இரவின் ரகசியப்பொழுது

கோகுலக் கண்ணன் அதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன. ரூ.50/-

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

மனுஷ்ய புத்திரன் நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் அறிந்திருந்தான். . . (ரினால்டோ அரெனாஸ்) ரூ.50/-

தேவதையல்ல பெண்கள்

யாழினி முனுசாமி நவீன கவிஞர்களில் தனித்துவமான குறிப்பிடத்தக்க கவிஞர் யாழினி முனுசாமி. வாழ்வின் முரண்பாடுகள் போதாமைகள் சார்ந்த துக்கம் இக்கவிதைகளில் ததும்பி நிற்கிறது. ரூ.40/-

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்

தீபச்செல்வன் நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப்பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை. மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சரிக்கையாக இருப்பவை. ஓர் இலக்கியவாதி வரலாற்றாளனின் பாத்திரத்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பத்தை தீபச்செல்வன் உண்மையுணர்வுடன் கடமையாற்றியிருக்கிறார். ரூ.80/-

இன்றிரவு நிலவின் கீழ்

ஆர். அபிலாஷ் அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வைகளையும் அனுபவங்களையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடியவை. ஆர்.அபிலாஷ் இந்தத் தொகுப்பில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 100 நவீன ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இயற்கையின், மனித இருப்பின் எண்ணற்ற ரகசியங்களைத் தொட்டுச் செல்லும் இக்கவிதைகள் ஹைக்கூ என்ற வடிவத்தின் மகத்தான அழகியலை வாசகர்கள் முன் படைக்கின்றன. ரூ.75/-

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

இந்திரஜித் இரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அடையக்கூடிய அர்த்தமற்ற அபத்த கணங்களைப் பற்றிய அங்கதம் மிகுந்த சித்தரிப்பினை வழங்குகின்றன. நவீன கவிதைக்குள் இந்திரஜித் ஒரு புதிய உணர்வுத்தளத்தை உருவாக்குகிறார். ரூ.50/-

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்

நேசமித்ரன் நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன. ரூ.50/-

ஹேம்ஸ் என்னும் காற்று

தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களை கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டு திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களை கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று. ரூ.35/-

வெயில் தின்ற மழை

நிலா ரசிகன் இரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன. ரூ.50/-

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

பொன். வாசுதேவன் கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன. ரூ.70/-