அண்டை அயல் உலகம்

ரவிக்குமார் சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் ரவிக்குமார், தெற்காசியாவில் பயங்கரவாதம் குறித்த சிக்கல்களை இந்நூலில் தீவிரமாக விவாதிக்கிறார். ரூ.90/-

பாப் மார்லி-இசைப்போராளி

ரவிக்குமார் கலையின் உன்மத்தத்தின் வழியே விடுதலையின் அர்த்தத்தை தேடியவன் பாப்மார்லி. தனது இசையையும் வாழ்வையும் சாகசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றதன் மூலம் ஒரு பிரமாண்டமான கனவாக, புனைவாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவன். பாப் மார்லியின் இந்த இசையும் கவித்துவமும் மிகுந்த வாழ்வை பற்றிய ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது ரவிக்குமாரின் இந்த நூல். ரூ.110/-

உலக சினிமா

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர்களின் நேர்காணல்கள், உலகின் சிறந்த இயக்குனர்களைப் பற்றிய கட்டுரைகள், சினிமா குறித்த ஆழமான பார்வைகள், இந்திய சினிமா, சிறந்த இந்திய இயக்குனர்கள் பற்றிய கட்டுரைகள், குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்ட்ரி, திரைப்பட விழா, விருதுகள், பற்றிய பதிவுகள் என மிக விரிந்த தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் புதிய பதிப்பு புதிய கட்டுரைகளும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டி ருக்கிறது. உலக சினிமா பற்றிய ஒரு தலைசிறந்த கையேடு. ரூ.900/-

தாந்தேயின் சிறுத்தை

சாரு நிவேதிதா கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன. ரூ.230/-

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்

மனுஷ்ய புத்திரன் டிசம்பர் 2009 வரை உயிர்மை இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பு இது. இவை உயிர்மையில் வெளிவந்த சமயத்தில் வாசகர்களிடையே வரவேற்பையும் தீவிரமான எதிர்வினைகளையும் உருவாக்கின. நம்முடைய காலத்தின் மௌனங்களுக்கும் மறதிகளுக்கும் எதிராக உறுதியான குரலில் பேசும் இக்கட்டுரைகள் சமகால வரலாற்றின் பதிவுகள் மட்டுமல்ல, வாசகர்களோடு நிகழ்த்தப்பட்ட தீவிரமான உரையாடல்களுமாகும். ரூ.150/-

நம் காலத்து நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன் நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு தான் எல்லா நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன. நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கியவடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன. செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் எழுதிச் செல்லும் காலம் என்ற தொடரை எழுதி அது பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில் உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகின்றது. ரூ.250/-

சித்திரங்களின் விசித்திரங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின்உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள். இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் ஓவியங்களின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான ஸ்டேரெரோ, வில்மாஸ் சிக்மண்ட், நிக்விஸ்ட், கார்டன் வில்லிஸ் போன்றவர்கள் தங்களது உந்து சக்தியாக ஓவியர்களையே குறிப்பிடுகிறார்கள். சித்திரங்களின் விசித்திரங்கள் தீராநதியில் தொடராக வெளிவந்து பரந்த வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. ரூ.75/-

ஜிப்ஸியின் துயர நடனம்

யமுனா ராஜேந்திரன் ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித்திரவதையை இன்பமாகத் துயக்கும் தத்துவ மனம், பெண்ணுடலை விலக்கிய மதம், உடலின் வழி தன் ஆன்மாவை வெளியிட்ட கலைமனம், இந்தியச் சிறுபான்மையின மக்களின் கையறுநிலை, ஈராக் முதல் குன்டனாமோ சித்திரவதை முகாம் வரை பைசாச அரசொன்று அம்மக்களின் மீது சுமத்திய சித்திரவதை அமைப்பு என இக்கட்டுரைகள் அனைத்திலும் சித்திரவதைக்கு எதிரான மனிதரின் சீற்றமும் வாழ்தலுக்கான அவர்களது மனித வேட்கையும் தான் வெளிப்பட்டிருக்கிறது. ரூ.120/-

சொல்லில் அடங்காத இசை

ஷாஜி இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இசைக் கலைஞர்கள் குறித்த நுட்பமான அறிமுகங்கள் கொண்ட இந்த நூல் இசையை அதன் அனுபவத் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் அணுகுகிறது. மகத்தான கலைஞர்களின் வாழ்வையும் கலையையும் தனது காவியத்தன்மை கொண்ட கவித்துவமான சித்தரிப்பின் மூலம் எழுதிச் செல்லும் ஷாஜியின் இக்கட்டுரைகள் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றன. ரூ.120/-

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

சுகுமாரன் இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அணுகலைக் கொண்டவை. அதன் விரிவாக்கமாகவே பிற இலக்கிய வடிவங்களைப் பற்றிய நோக்கும் அமைந்திருக்கிறது தனிக்கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், மதிப்புரைகள், அனுபவப் பதிவுகள், குறிப்புகள் என்று வெவ்வேறு வடிவங்களில் இவை எழுதப்பட்டிருந்தாலும் இவற்றுக்கிடையில் ஒரு பொதுத்தன்மை இழையோடுகிறது. ஓர் இலக்கிய ஆர்வலன் தன்னைப் பாதித்த நிகழ்வுகளுடன் மேற்கொண்ட எதிர்வினை இவை. இலக்கிய அனுபவத்தின் மூலம் வாழ்க்கையின் வடிவத்தைத் தொட்டு உணர முடியுமா என்று பார்க்கும் பேராசைதான் இக்கட்டுரைகளின் அடிப்படை. ரூ.100/-