இசையின் தனிமை

ஷாஜி ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக ஆழமான மனப்பதிவுகளை உருவாக்குபவை. நாம் அறிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள் குறித்து ஷாஜி அறியப்படாத பல உலகங்களை இந்தக் கட்டுரைகளில் திறந்து காட்டுகிறார். வாழ்வுக்கும் கலைக்கும் இடையே நிலவும் அந்தரங்கமான, புரிந்து கொள்ள முடியாத உறவுகளை இக்கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இசையோடு நமக்கு இருக்கக்கூடிய மௌனமான தனிமையான உணர்விற்கு ஷாஜி சொற்களை அளிக்கிறார். ரூ.100/-

கனவாகிப் போன கச்சத்தீவு

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மறுமலர்ச்சி தி.மு.கவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு-தேசியமயமாக்கப்படல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காக பல்வேறு பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளார். Amnesty International இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். மத்திய அரசின் இரயிலவே அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தை தொழிலாளர் ஆலோசனைக்குழு போன்ற பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர். திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சி துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். ‘உரிமைக் குரல் கொடுப்போம்’, ‘மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்’, நிமிர வைக்கும் நெல்லை, சேதுக்கால்வாய் ஒரு பார்வை, கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, தமிழ்நாடு-50, 123 இந்தியாவே ஓடாதே! நில்!!’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். ‘கதை சொல்லி’ இணையாசிரியர். ‘பொதிமை-பொருநை-கரிசல் கட்டளை’ அமைப்பின் நிறுவனர். ரூ.40/-

கலைஞரும் முல்லைப்பெரியாறும்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நடவடிக்கைகள் பற்றியும், கேரள அரசின் பிடிவாதப் போக்கினையும், நியாயமற்ற அணுகுமுறைகளையும், சட்ட ரீதியாக தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் கேரளத்தின் போக்கால் தமிழகத்திற்கு ஏற்படும் தேவையற்ற வீணான பாதிப்புகள் பற்றியும், ஒப்பந்தகால வரலாறு பற்றியும் இந்நூலில் எடுத்து காட்டப்பட்டுள்ளது. – மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் ரூ.60/-

திசை அறியும் பறவைகள்

சாரு நிவேதிதா இத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையையும் தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகனின் பழக்கப்பட்ட சிந்தனா முறையைக் கலைக்கின்றன. ரூ.180/-

கனவின் பாதை

மணா தடம் பதித்தவர்களின் தடயங்கள் வேதனைகளின் விம்மல் நிறைந்தவை. வெற்றி பெற்றவர்களின் வெளிச்சத்தில் எண்ணற்ற தோல்விகளின் இருள் மறைந்திருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையின் கதையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். அரசியல், திரைப்படம், சமூகம், இசை, நடனம் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பின்னே இருக்கும் உழைப்பின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது இந்த நூல். ரூ.85/-

தாமரை பூத்த தடாகம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர் பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயிரினங்களின் அழிவு, வனங்கள் மறைந்து போதல், நீர் நிலைகள் மாசுபடுத்தப்படுவது, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கும் வாழ்க்கைமுறை என மிக விரிவான தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன. தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்களில் வெளிப்படும் சுயமான பார்வைகளும் அசலான அனுபவங்களும் பெரும் நம்பகத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, அவை வாசகனின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. இது துறை சார்ந்த எழுத்துகளில் மிக அபூர்வமாக வெளிப்படும் ஓர் இயல்பாகும். இது அவரது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ரூ.100/-

மதவெறி

அ.முத்துக்கிருஷ்ணன் இந்தியா முழுக்க மதக் கலவரங்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நம்மை அச்சுறுத்துகின்றன. இத்தகைய பின்புலத்துடன் சுதந்திரத்திற்கு முன்பிருந்து இன்றுவரையிலும் நடைபெற்ற மதவாத நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ராம் புன்னியானி, மதசார்பின்மை சார்ந்து எழுதியும், இயங்கியும் வருபவர். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியினை அவர் நம் கண்முன்னே விவரிக்கிறார். ரூ.50/-

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

ந. முருகேச பாண்டியன் நல்ல காலம் பிறக்கப் போகுது என்ற நம்பிக்கையை வீடுகள் தோறும் விதைக்கும் குடுகுடுப்பைக்காரர்களின் தனிப்பட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புத்தகம் புதிய வாழ்க்கை முறையினையும் பண்பாட்டினையும் அறிமுகம் செய்கின்றது. எதிர்காலம் பற்றிய வினோத வெளிக்குள் பயணிக்கும் திறனுடைய குடுகுடுப்பைக்காரர்கள் பற்றிய தகவல்கள் வாசிப்பின் வழியாகப் புதிய அனுபவங்களைத் தரக்கூடியன ரூ.60/-

சைபர் சாத்தான்கள்

வா. மணிகண்டன் மின்னஞ்சல், ஏடிஎம் கருவி மூலமாக செய்யப்படும் குற்றங்கள் எனத் தொடங்கி, குழந்தைகள் மீதான வன்முறைகள், விரவிக்கிடக்கும் ஆபாசம், பயங்கரவாதம் என இணையத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமானது முதல் மிகக் காமெடியானது வரையிலான சில குற்றங்களை இந்தப் புத்தகத்தில் வாசிக்கப் போகிறீர்கள். கணினி என்ற தனித்த உலகத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளால் அரங்கேற்றப்படும் இந்தக் குற்றங்கள் சுவாரசியமான நடையில் விவரிக்கப்படுவதுடன் உங்களின் மீது இதே குற்றங்கள் நிகழ்த்தப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்னும் அடிப்படையான நுட்பத்தை கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். ரூ.50/-

நாயக்கர் காலம் (வரலாறும் இலக்கியமும்)

அ. ராமசாமி வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்டின. அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளும், வாய்மொழிக் குறிப்புகளின் தொகுப்புகளும் முக்கியமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக இருக்க முடியும் என்பதை ஒத்துக்கொண்டு பல ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்தகைய ஆய்வுகள் ஒரு தேசத்தின் சமுதாய வரலாற்றை முழுமையாக்கப் பயன்படும். உலகநாடுகளின் இப்பொதுப் போக்கிலிருந்து தமிழ் விலகிச் செல்லவில்லை. கல்விப்புல ஆய்வு முறையியலின் அடிப்படையான கூறுகளை கலை இலக்கியத் திறனாய்வுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் பேரா.அ.ராமசாமியின் இந்த நூல் அத்தகையதொரு ஆய்வு நூலே. தமிழக வரலாற்றில் அதிகம் ஆய்வு செய்யப்படாத நாயக்கர்களின் காலத்தை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை முதன்மையான சான்றாதாரங்களாகக் கொண்டு தமிழகச் சமுதாய வரலாற்றை முழுமையாக்குவதற்குப் பயன்படும் பல முடிவுகளை முன் வைத்துள்ளது. ரூ.130/-