மலாலா – ஓர் அறிமுகம்

துப்பாக்கி ஏந்திய தாலிபான்களுடன் பேனா ஏந்திப் போராடியவர் மலாலா. துப்பாக்கியால் துளைக்கப்பட்டும் மனம் தளராமல் பெண் கல்விக்காகப் போராடியதால் 17 வயதில் ‘அமைதிக்கான நோபல் பரிசை’ப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட வீரப் பெண்ணின் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வது நமக்கு அவசியமாகிறது. அந்த நோக்கத்தில் உருவானதே இந்த நூல். – பிரியா பாலு ரூ.60/-

மகாபாரதம்

சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. – பிரபஞ்சன் ரூ.300/-

நாடற்றவன்

2012இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்கமுடியும்? அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர். – அ. முத்துலிங்கம் ரூ.225/-

தேநீர் மேசை

இக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்த மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற்றி அறிந்துகொள்ளாதது நம் பெற்றோர் குறித்தும் மூதாதையர் குறித்தும் அறிந்துகொள்ளாததைப் போன்றது என்பேன். இக்கட்டுரைகளைப் படிக்கிறவர்களுக்கு அவரவரது சொந்த ஊரைப் பற்றிய ஞாபகங்கள் உயிர்பெற்றால், அதுவே என் மகிழ்ச்சி. – அழகிய பெரியவன் ரூ.70/-

சில இயக்குநர்கள் – சில திரைப்படங்கள்

இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதவும் ஆசை. – வண்ணநிலவன் ரூ.65/-

குறுக்குவெட்டுகள்

‘குறுக்குவெட்டுகள்’ இயல் இசை நாடகம், ஆடிய ஆட்டமென்ன, சில நூல்கள் என மூன்று பகுதிகள் கொண்டவை. எல்லாமே வாழ்க்கை  பற்றியவை. – அசோகமித்திரன் ரூ.150/-

கதை மழை

பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. – பிரபஞ்சன் ரூ.80/-

வான்குருவியின் கூடு

பெருமாள்முருகன், தன் வாழ்க்கை அனுபவங்களோடு தனிப்பாடல்கள் இயைந்த விதம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ரூ.80/-  

மறுவாசிப்பில் மரபிலக்கியம்

நவீன இலக்கியவாதிகளுக்கும் மரபிலக்கியங்களுக்கும் இடையில் கண்களுக்குப் புலப்படாத பெரிய சுவர் உள்ளது. உலகத்து நவீனப் படைப்பாளர்களின் உன்னதமான படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கின்றவர்கள் மரபிலக்கியப் படைப்புகளை அந்நிய வஸ்து போலப் புறக்கணிக்கின்றனர். நவீன இலக்கியவாதிக்கு மரபிலக்கியம் எதிரானது அல்ல. ஒரு வகையில் நேசமானது. தமிழ் மரபின் எச்சங்கள் பதிவாகியுள்ள பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை வாசிக்க வேண்டிய தேவை வலுவடையும் நிலையில் புதிய தடத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் நவீனப் படைப்பாளிக்குத் தான் செல்ல வேண்டிய திசைவழி புலப்படும். – முருகேச பாண்டியன் ரூ.100/-

மயிலிறகு குட்டிபோட்டது

பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப் பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். மனித இனம் காலம் தோறும் வடிவமைக்கும் விழுமியங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தம் வாழ்க்கை நெறிகளாகக்கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களைச் சித்தரிக்கும் இக்கட்டுரைகள், மீறுபவர்களையும் கூடவே அணைத்துச் செல்கிறது. வெறுக்கத்தக்க மனிதர்களே உலகில் இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருக்கிறது. – பிரபஞ்சன் ரூ.130/-