கோபிகிருஷ்ணன் படைப்புகள்

ரூ.800/- கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.

ஜெயமோகன் சிறுகதைகள்

ரூ.460/- எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச் செல்வேன். பரிசுத்தமான கடற்கரை. முந்தைய- நாள் மழைபெய்த மணற்பரப்பு. அலைநாக்கின் ஈரம் படிந்து படிந்து குமிழியிட்டு வற்றிக்கொண்டிருந்த பரப்பில் காலைச்செம்மை.

பூமணி சிறுகதைகள்

ரூ.400/- எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள்.

கடவுள் கற்ற பாடம்

ரூ. 90/- இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழுது உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிர்களும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது இதன் ஒவ்வொரு கதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் படைப்புத்திறனும் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு நேர்த்தியும் இணைந்தே செல்லும் தண்டவாளம்போல நம்மைப் புதிய புதிய தூரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. ‘கடவுள் கற்ற பாடம்’ கடவுளுக்கான பாடமேதான்.

அழகிய பெரியவன் கதைகள்

ரூ.500/- அழகிய பெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக்கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உருவாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத்திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டையோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது.  இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகிய பெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத்தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகிய பெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு. – சி. மோகன்

ஆ.மாதவன் கதைகள்

ரூ.500/- ஆ. மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெருட்டாமல்… அவரது மொழி மணிப்பிரவாளம் இல்லை, மணிமிடைப் பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேரி போல. தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை. ஆ. மாதவனின் சிறுகதைகளை வாசித்தவர் இதை உணர்வார்கள், அவற்றின் தனித்துவம் பற்றியும் செய்நேர்த்தி பற்றியும் கலை வெற்றி பற்றியும் அறிவார்கள். –  நாஞ்சில் நாடன்

மரி என்கிற ஆட்டுக்குட்டி

மரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம். – பிரபஞ்சன் ரூ.170/-

படைப்பாளிகள் உலகம்

ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது. இக்கட்டுரைகளை எழுத நேர்ந்தபொழுது ஒரு சில எனக்கு நிர்ப்பந்தமாகக் கூடத் தோன்றியிருக்கின்றன. ஆனால் எழுதி முடித்தபின் இவை அனைத்தும் என் சிந்தனைக்கும் கவனத்திற்கும் நிறைய ஊக்கம் தந்திருக்கின்றன. ஒரு நல்ல கதை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் மனநிறைவுக்கும் இது சற்றும் குறைந்ததல்ல. – அசோகமித்திரன் ரூ.190/-